கோயம்புத்தூர்: பொள்ளாச்சி சீலக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் பூர்வீக சொத்தான 20 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்து தரக்கோரி பாஜகவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் ஆவணங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இடம் விற்பனை ஆகாத நிலையில், பத்திரத்தை திரும்ப பெற்று கொள்கிறோம் என கனகராஜ் தம்பதியினர் கேட்டபோது அதனை திருப்பி தர கோபாலகிருஷ்ணன் மறுத்து, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த தம்பதி நேற்று (மார்ச் 24) காலை கோபாலகிருஷ்ணன் வசித்து வரும் குடியிருப்புடன் கூடிய தென்னை தோப்பில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே சுமதி உயிரிழந்தார். கனகராஜ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமதி இறந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கோபாலகிருஷ்ணணை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு காவல் துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்...! சீர்கெட்டுத் திரியும் இளைஞர்கள்