திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளியில் இருந்து கேரள எல்லையான கோயம்புத்தூர் மாவட்டத்தை அடுத்த வாளையாறு வரை ரூ.850 கோடி செலவில் ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இந்த ஆறுவழிச் சாலையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிகளவிலான தனியார் சொகுசு பேருந்துகள், சரக்கு லாரிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. தற்போது இந்த ஆறு வழிச் சாலையின் கருமத்தம்பட்டி பகுதியில் அமைந்துள்ள உயர்மட்ட பாலத்தின் ஓரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் உடைய தொடங்கியுள்ளது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் உள்ளே இறங்கி மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அதிகளவிலான வாகனங்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சோமனூர் பேருந்து நிலையம், இடிந்து விழுந்து 5 பேர் பலியாகினர். இதேபோன்ற கோர சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் உதயசங்கரிடம் கேட்டபோது, "பாலம் நன்றாக உள்ளது. தற்போது பாலத்தின் உறுதித்தன்மையை கண்டறிய சோதனை நடைபெற்று வருகிறது", என்றார்.