கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகம் நெல்லித்துறை காப்புக்காடு பகுதியில் அமைந்துள்ளது சித்துக்கொனை பழங்குடியின கிராமம். இந்த கிராமத்தின் அருகில் சுமார் எட்டு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு மாடு ஒன்று இறந்துள்ளது.
இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனக் காவலர் சடையன், தேக்கம்பட்டி கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் ஆகியோர், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ஆலோசனைப்படி இறந்த காட்டு மாடுக்கு உடற்கூறாய்வு மேற்கொண்டனர்.
இதில், நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டதால், நுரையீரல் வீக்கம் அடைந்து காட்டு மாடு உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர், அப்பகுதியிலிருந்து சிறிது தூரத்தில், பெரிய அளவில் குழி தோண்டி, அதற்குள் கிருமிநாசினிகள் தெளித்தும், கிருமிநாசினி பொடிகளைத் தூவியும் மாட்டை புதைத்தனர்.
மேலும், இறந்த காட்டு மாடு உடலிலிருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வனத்துறை அலுவலரை தாக்கிய 4 பேர்