கோயம்புத்தூர்: கோவையில் வனப்பகுதியிலிருந்து காட்டுயானைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், வனத்துறையினர் ஊர் பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், தடாகம், மருதமலை, மாங்கரை, பேரூர், தொண்டாமுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. மேலும், வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால், ஊருக்குள் புகும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
கட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வனத்துறையினர் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வந்த நிலையில், அதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டனர். இருப்பினும், பல்வேறு நேரங்களில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன.
அதன் தொடர்ச்சியாக நேற்று (ஜன.01) இரவு 11 மணி அளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குட்டிகள் உட்பட எட்டு காட்டு யானைகள், தடாகம் அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் புகுந்து, சாலையோரம் இருந்த செடிகளை பிடுங்கி தின்று விட்டு சென்றுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
மலையடிவாரம் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில், அகழி வெட்டி, காட்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுகுறித்து வனத்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ளவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நஞ்சுண்டாபுரம் ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த ரேஷன் பொருட்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்றது குறிப்பிடத்தக்கது. அதே போல் பொண்ணுத்து அம்மன் கோயில் மலை அடிவாரப் பகுதியில் காட்டுயானைகள் உலாவி கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு காட்பாடியில் உற்சாக வரவேற்பு!