கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் தடாகம் அடுத்த பன்னிமடை பகுதியில் தெப்பனூர் எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த வசந்த் என்பவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.
இந்நிலையில் நேற்று(டிச. 8) பணிகள் முடிந்த நிலையில் வசந்த் தன்னுடைய வீட்டில் இருந்து உள்ளார். இரவு 9 மணி அளவில் ஊருக்குள் யானைகள் புகுந்ததாக தகவல் வந்ததை அடுத்து வசந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் கதவுகளை தாழிட்டுக் கொண்டு உள்ளே டிவி பார்த்துக் கொண்டிருந்து உள்ளனர்.
அப்போது வீட்டின் அருகே வந்த மூன்று யானைகளில் ஒரு யானை 10அடி அகலம் உள்ள வீட்டின் ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே வந்துள்ளது. இதனை அடுத்து வசந்த் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் அருகில் உள்ள படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டனர்.
இதையும் படிங்க: வேளச்சேரியில் தொடரும் மீட்புப் பணி.. மேலும் ஒருவர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டரா?
சுமார் ஒரு மணி நேரம் வீட்டுக்குள் நுழைந்த யானை அங்கேயே உணவுப் பொருட்களை தேடியபடி நின்றுள்ளது. பின்னர் அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் சத்தம் எழுப்பியும் பட்டாசு வெடித்தும் யானையை வீட்டிற்குள் இருந்து வெளியே விரட்டினர்.
பின்னர் மூன்று யானைகளையும் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். இதுகுறித்து வசந்த் கூறுகையில், "வரப்பாளையம் வனப்பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வந்த நிலையில், தற்போது வீட்டிற்குள்ளேயும் நுழைந்துள்ளது.
தொடர்ந்து விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து வருவதால் அதனை கட்டுப்படுத்த வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்" எனக் கூறினார். எனினும் யானைகள் ஊருக்குள் நுழைவது தொடர்கதையாகி உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: இன்னும் வடியாத மழை நீர்; வளசரவாக்கம் பகுதியில் வெள்ளத்தின் நடுவே அரசு மருத்துவமனை!