கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார் கான்டூர் கனல் பகுதியில் சுள்ளிக் கொம்பன் யானை சாலையைக் கடக்க இருந்தது. அப்போது அவ்வழியே வாகன நெரிசலில் சாலையை கடக்க முடியாமல் இருந்ததால் வனத்துறை அதிகாரியின் பேச்சைக் கேட்டு சாலையின் ஓரத்தில் காத்திருந்தது.
அரை மணி நேரம் எங்கும் செல்லாமல் வனத்துறை அதிகாரி பேச்சைக் கேட்டு அந்த இடத்திலேயே நின்றது. அதிகாரியும் யானையை கட்டுபடுத்தி விட்டு வாகனங்களை கடந்து செல்ல சைகையளித்தார். இருபுறமும் காத்திருந்த வாகனங்கள் கடந்து செல்ல அதிகாரி வழிவகை செய்தார். அதுவரையிலும் சுள்ளிக்கொம்பன் காத்திருந்தது.
இந்த சுள்ளிக்கொம்பன் காட்டுயானை ஆழியார் சோதனைச் சாவடி முதல் கான்டூர் கனல் வரை தினம் தோறும் உலா வருகிறது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை நோக்கி வரும் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக வர வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பில் அங்கிருந்த வனத்துறை அதிகாரி சாமர்த்தியமாக யானையை நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை அனுப்பி வைத்தார். வனத்துறை அதிகாரி யானையைக் கட்டுப்படுத்தி வாகனக்கள் செல்ல வழிவகை செய்த இந்த காணொலி தற்போது வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வனத்துறை சேர்ந்த வனவர் ஜோணிக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.