கோயம்புத்தூர் தடாகம் அடுத்த வீரபாண்டுபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யா சாமி (55). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா. மகன் பிரசாந்த். அய்யாசாமிக்கு மலையை ஒட்டிய பகுதியில் 3 ஏக்கருக்கு நிலம் உண்டு. இன்று (மே 2) காலை 7 மணியளவில் அவரும் அவர் மனைவியும் மலையடிவாரத்தில் அரப்பு காய்களை பறிக்க சென்றனர்.
அப்போது அங்கு ஒரு காட்டு யானை நிற்பதை கண்டு இருவரும் அங்கிருந்து ஓடினர். இருவரையும் துரத்திய காட்டு யானை அய்யாசாமியை தாக்கியது. இதில் அய்யாசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து வனத்துறையினர், தடாகம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கபட்டது. பின் அய்யாசாமியின் உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் யாரும் மலை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் மக்கள் பலரும் சட்டை செய்யாமல் நடமாடுவதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இனிமேலாவது மக்கள் வனத்துறையினரின் அறிவுரையை பின்பற்றி நடக்கவேண்டும் என காவல் துறையினர் கூறியுள்ளனர்.