கோயம்புத்தூர்: சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சிநகரைச் சேர்ந்தவர் நாராயணசாமி (55). இவர் தச்சுதொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (50). இவர்களுக்கு ராஜ்குமார், சதீஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நாராயணசாமிக்கும் சுந்தராபுரம் பகுதியைச்சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே திருமணமத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது ராஜேஸ்வரிக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக நேற்று மாலை (மார்ச் 06) கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி தனது கணவரைக் கத்தியால் குத்தினார். அதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து நாராயணசாமி சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ராஜேஸ்வரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கணவரைக் கொலை செய்ததாக கூறி சரணடைந்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற சிங்காநல்லூர் காவல்துறையினர், இறந்து கிடந்த நாராயணசாமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ராஜேஸ்வரி, அவரது மகன் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தந்தை, மகன் தற்கொலை - காவல் துறை விசாரணை