கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் திமுக சார்பில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் மக்களிடம் புகார் மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "கொடநாடு பங்களா இன்னும் மர்ம பங்களாவாகத்தான் உள்ளது, கொடநாடு பகுதியில் மக்கள் வந்துசெல்ல தடையாக உள்ள தடுப்பு வேலிகள் திமுக ஆட்சியில் அகற்றப்படும். திமுக ஆட்சியில் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் சிறை செல்லும் முதல் நபர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிதான். அதிமுகவின் எஃகு கோட்டையில் ஏற்கனவே ஓட்டை போட்டுவிட்டோம்.
கோயம்புத்தூரில் நடக்கும் பல விஷயங்கள் மர்மமாக இருக்கின்றன. கோயம்புத்தூர் குடிநீர் விநியோகத்தை அமைச்சர் வேலுமணி தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டார். சூயஸ் குடிநீர் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. கோயம்புத்தூர் என்ன அமைச்சர் வேலுமணியின் குத்தகை பூமியா? ஆளுமைத் திறன் இல்லாதவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டு உரிமைகளை அடைமானம் வைத்து முதலமைச்சர் பதவியில் நீடித்துக்கொண்டுள்ளார். பாஜக கீ கொடுத்தால் ஆடும் பொம்மை முதலமைச்சர் பழனிசாமி. அதிமுகவினர் ஊழல் பணத்தில் வெற்றிபெற முயல்கின்றனர்.
ஆட்சி முடியும் நேரத்தில் வெற்று போலி அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். ஊழலில் நம்பர் 1 விருதை எடப்பாடி பழனிசாமிக்குத்தான் தர வேண்டும். அதிமுக ஊழல்களை எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்க திமுக தயார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.யில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு!