கோயம்புத்தூர் மாவட்டம் காளப்பட்டி பகுதியிலுள்ள திமுக பிரமுகர் பையா கவுண்டர் என்கின்ற கிருஷ்ணன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை 12 மணியளவில் அவர் வீட்டிற்கு வருமான வரித் துறையினர் சோதனை செய்ய வரும்போது பையா கவுண்டர் துக்க நிகழ்ச்சிக்காக ஈரோடு வரை சென்றிருந்தார்.
எனவே அவர் வரும் வரை காத்திருந்து 2 மணியளவில் வீட்டிற்குச் சென்ற அலுவலர்கள், அதன்பிறகு சோதனை நடத்தி வருகின்றனர். இதனையறிந்து அங்கு வந்த திமுகவினர் அவர் வீட்டின் முன் திரண்டு வருமான வரித்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அவர் வீட்டிற்கு கோவை சிங்காநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் நேரடியாக வந்திருந்தார். அவரை வீட்டிற்குள் வருமான வரித்துறையினர் அனுமதிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, " பாஜக அரசும், அதிமுக அரசும் திமுகவினரை அச்சுறுத்தும் வகையில் இந்த வருமான வரித்துறை சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலில் திமுகவினரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும், பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அரசுகள் இது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.
ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாமல் திமுக வருகின்ற 2021ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெறும். எதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது என்று தெரியவில்லை, சோதனை முடிந்தபின் இது குறித்த தகவல்கள் தெரியவரும்" என்றார்.