கோடைக்காலம் முடிவடைந்த நிலையிலும் தண்ணீர் பஞ்சம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் குடிநீர் விநியோகம் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் தலைமையில் ஏழு மாவட்ட அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த குடிநீர் வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் தற்போதைய குடிநீரின் இருப்பு நிலை, விநியோகிக்கும் முறைகள், குடிநீர் தேவை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
அதேபோல் சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிகப்படுகிறதா என்பது குறித்து கீழ்மட்ட நிலை வரை ஆய்வு செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முதற்கட்டமாக ஏழு மாவட்ட குடிநீர் மேம்பாட்டுப் பணிக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.