கோவை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீருக்காக யானைகள் அருகில் உள்ள மலையோர கிராமங்களில் புகுவது வழக்கமாகி வருகிறது. போதிய மழை இல்லாததால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இந்த தண்ணீர் பற்றாக்குறையை போக்க வனத்துறையினர் சில இடங்களில் செயற்கை குளங்கள் அமைத்து வன விலங்குகளின் தாகம் தீர்த்து வருகின்றனர். மேலும், செயற்கை தொட்டிகள் உருவாக்கப்பட்டு அங்கு நீர் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் கூட்டு புலிக்காடு கங்கா சேம்பர் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் தூமனூர் ஆகிய பகுதிகளில் ஐந்து தண்ணீர் தொட்டிகள் வனத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் சில தொட்டிகளில் மட்டுமே தண்ணீர் உள்ளது.
ஐந்து ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி போதிய பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் யானைகள், மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அருகில் உள்ள செங்கல் சூளையில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியை நாடி செல்கின்றன.
இதற்காக, யானைகள் சாலையை கடந்து செல்வதால் மனிதர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக வனத்துறையினர் சிதலமடைந்த தண்ணீர் தொட்டிகளை பராமரித்து அங்கு தண்ணீர் விட வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் முறையாக தண்ணீர் விடப்படுகிறதா என்பதை வனத்துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.