கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மாநில அரசின் மூலமாக மாநகராட்சி நிர்வாகம் முழுவதும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் அதற்கு ஒத்துழைத்து, வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவேண்டும். குறிப்பாக, அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் அனைவரும் வெளியில் வரவேண்டும். முடிந்தவரை அதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் தாமாகவே அடிக்கடி கைகளைக் கழுவி தங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்றவைகள் இருந்தால், தாமாக எவ்வித மருத்துவத்தையும் கையாளக்கூடாது. கோவையில் 32 மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதில் 6000 பேர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மக்கள் யாரேனும் சளி இருமல் காய்ச்சல் இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மைதானங்கள் பேருந்து நிலையங்கள் போன்றவை சந்தைகளாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவசர அழைப்பிற்கு 1077 என்ற எண் இயங்கி வருகிறது. அல்லது 9750554321 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
கோவையில் பத்து இடங்களுக்கு மேல் சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு தினந்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. நாளை முதல் உணவு உள்ளிட்ட சில அத்தியாவசிய உதவிகளுக்காக 90877 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். நாளை முதல் காய்கறிகள் அனைத்தும் வார்டு வாரியாக சென்று விநியோகம் செய்ய 50 வாகனங்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் திருநங்கைகள்