கோயம்புத்தூர்: கேரள மாநிலம் கொச்சினில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றிக் கொண்டு, கோவை கணபதியில் உள்ள எரிவாயு நிறுவனத்திற்கு வந்த மூன்று லாரிகள், நேற்று(டிச.08) நள்ளிரவு திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் இருந்த சுற்றுச் சுவர் ஒன்று இடிந்து, லாரிகளின் மேல் விழுந்துள்ளது. இதில் லாரியில் உள்ள எரிவாயு வால்வுகள் உடைந்து கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.
இதனையடுத்து, லாரியில் ஏற்பட்ட கசிவை நிறுத்த எரிவாயு ஊழியர்கள் விரைந்தனர். மேலும் அங்கு தீயணைப்புத் துறையினரும் குவிக்கப்பட்டனர். லாரிகளைச் சுற்றி சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவு வரை போலீசார் தீக்குச்சி, செல்போன், டார்ச் லைட் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க அறிவுறுத்திக் கண்காணித்து வந்தனர். மேலும், பாலக்காடு சாலையில் வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றி விடப்பட்டது.
முதல் கட்டமாக இரண்டு லாரிகளில் வால்வுகள் அடைக்கப்பட்ட நிலையில், மூன்றாவது லாரியில் உள்ள வால்வைச் சீர் செய்தனர். பின்னர் 5 மணி நேரத்திற்குப் பிறகு, பாலக்காடு பிரதான சாலை வழியாகப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர், மற்றும் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய பாலங்கள் - வாகன ஓட்டிகள் அவதி!