கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர், புகைப்பட கலைஞர் சிவா. இவர் அப்பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு சென்ற சிவா, அங்கு மத்தி மீன் வாங்கியுள்ளார். அப்போது மீன் அழுகிய நிலையில் இரசாயன வாடை வீசுவதாக வியாபாரியிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு, ‘மீன் நன்றாக உள்ளது. வாங்கிச் செல்லுங்கள்’ என வியாபாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து மீனை வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்த சிவா, தனது மனைவியிடம் கொடுத்து சமைக்கக் கூறியுள்ளார். அப்போது அதிகமாக இரசாயன வாடை வந்துள்ளது. இருப்பினும் சமைத்த மீனை சிவா சுவைத்து பார்த்தவுடன் வாந்தி ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து சிவா மேலும் கூறுகையில், “காலையில் மீன் வாங்கும் போது இரசாயன வாடை வந்ததாக வியாபாரியிடம் கேட்டதற்கு, அவர் மீன் நன்றாக உள்ளது என பதிலளித்தார். பின்னர் மீனை வீட்டிற்கு கொண்டு வந்து பார்த்தபோது, மேலும் அதிக வாடை வந்தது.
இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, சமைத்த மீனை சுவைத்து பார்த்த போது வாந்தி ஏற்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது, குறிப்பிட்ட எண்ணுக்கு இது தொடர்பாக வாட்ஸ் ஆப்பில் புகார் செய்யுமாறு தெரிவித்தனர்.
எனவே வாட்ஸ் ஆப் மூலம் கெட்டுப்போன மீன் குறித்து புகார் அளித்தேன். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இதேபோன்று தரம் இல்லாத கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வதால் அதனை உட்கொள்ளும் குழந்தைகளும், பெரியவர்களும் பாதிப்படைவார்கள். சுகாதாரத்துறை அலுவலர்கள் இதில் சிறப்பு கவனம் எடுத்து, மீன் மார்க்கெட்டில் தரமற்ற மீன்கள் விற்பனை செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறுகையில், “கடலில் பிடிக்கப்படும் மீன்கள் பல நாட்களுக்கு பிறகு விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால், மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க பார்மலின் எனப்படும் ரசாயனத்தை தடவுகின்றனர். இது உடல் நலத்திற்கு தீங்கானது. அவ்வாறு பார்மலின் கலந்த மீன்களை விற்பனை செய்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாய்க்குட்டியை தலை கீழாக தூக்கிச்சென்ற நபர்கள் அதிரடி கைது!