கோயம்புத்தூர்: கோவையில் உள்ள வ.உ.சிதம்பரனார் பூங்கா அப்பகுதியில் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்கி வருகிறது. வ.உ.சி உயிரியல் பூங்கா அருகிலேயே வ.உ.சி மைதானம் அமைந்துள்ளது. இந்த நிலையில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இங்கு நடை பயிற்சி மேற்கொள்வார்கள்.
மேலும் வார விடுமுறை நாட்களில் குடும்பங்களுடன் வந்து பொது மக்கள் பொழுதை கழிப்பார்கள். இந்த நிலையில் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு வ.உ.சி உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லாததால், உயிரியல் பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது.
இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உயிரியல் பூங்கா செயல்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இங்குள்ள விலங்குகள், பறவைகள் ஆகியவை இடம் மாற்றம் செய்யப்பட்டன. இங்குள்ள விலங்குகள் பறவைகள் அனைத்தும் வண்டலூர் பூங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வேலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன.
இதற்காக இன்று (நவ. 3) கோவை வந்த உயிரியல் பூங்கா ஆணைய நிர்வாகிகள் இங்குள்ள விலங்குகளை கணக்கிட்டு ஆய்வு செய்து, அவற்றை இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர். இன்றைய தினம் பாம்புகள், முதலைகள், குரங்குகள், ரோஸ் பெலிக்கன் பறவைகள் உள்ளிட்டவை இடமாற்றம் செய்யப்படுகின்றன.
அதனை தொடர்ந்து, இனிவரும் நாட்களில் இங்குள்ள அனைத்து விலங்குகளும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இது குறித்து பேசிய வ.உ.சி உயிரியல் பூங்கா இயக்குநர் சரவணன், "மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு போது இட வசதி இல்லாததால், இதற்கான உரிமம் ரத்து செய்தது.
இதனால் இங்குள்ள விலங்குகளை எல்லாம் வண்டலூர், சத்தியமங்கலம், வேலூருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. மேலும் இன்று (நவ. 3) பாம்புகள், குரங்குகள், முதலைகள், ரோஸ் பெலிக்கன் ஆகியவற்றை எடுத்து செல்கிறோம்" என்று தெரிவித்தார்.