கோயம்புத்தூர்: ’டிவின் ட்ராட்லர்ஸ்’ என்ற யூட்யூப் சேனலை கோவை காரமடையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்குகளை கொண்டு சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2K கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்தார். இவரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரபல யூட்யூபர் ஜி.பி.முத்துவும் இருசக்கர வாகனத்தில் அதிக வேகமாக பயணித்ததை அடுத்து போத்தனூர் மற்றும் சூலூர் காவல்துறையினர் டிடிஎஃப் வாசன் மீது பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்த டிடிஎஃப் வாசன் முன் ஜாமீன் பெற்றுள்ளார். இந்த நிலையில், நீதிமன்றத்திற்கு முன் ஜாமீன் வாங்க வந்த டிடிஎஃப் வாசன் நீதிமன்றத்திற்கு தான் வீட்டிலிருந்து கிளம்புவது நீதிமன்ற வளாகத்திற்குள் காரில் வந்து இறங்குவது, புத்தகத்தில் கையெழுத்திடுவது என்று அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் கேஜிஎஃப் திரைப்படத்தில் வரும், “வன்முறை எனக்கு பிடிக்காது, ஆனால் வன்முறை என்னை விரும்பினால், அதை என்னால் தவிர்க்க முடியாது...!” என்ற வசனத்துடன் எடிட் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக அப்போது டிடிஎஃப் வாசன் கோட் சூட் அணிந்திருந்தார். வழக்கமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ வர சங்கடப்படும் காலம் மாறி இப்போது பெருமையாக சொல்லிக்கொள்ளும் காலம் வந்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: "நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம்"- ஸ்டாலின்!