கோவை: நாட்டின் 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விக்கி மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களை கொடியேற்ற வைத்து இனிப்புகள் பரிமாறப்பட்டன.
பொதுவாக அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றும் நிகழ்வுக்கு மாறாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளர்களை கொடியேற்ற வைத்த இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: "தமிழக சிறைத்துறை தண்டனை இடமாக இல்லாமல் வாழ வைக்கும் இடமாக உள்ளது"- அமைச்சர் ரகுபதி!
சமீப காலங்களாக நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தலைவர்களின் பிறந்த நாள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை கொண்டாடவும், மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலை தயார் செய்யவும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் உலக உணவு தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காய்கறி சந்தைக்குள் திடீரென கார் புகுந்த சம்பவத்தில் 3 பேர் படுகாயம் - கோவையில் பரபரப்பு!