கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்கயிலை என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பின்புறம், கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7ஆவது மலையில் வெள்ளிங்கிரி ஆண்டவர் சுயம்புவாக காட்சியளிக்கிறார்.
இந்த சுயம்பு லிங்கத்தை தரிசிக்க தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். பிப்ரவரி முதல் மே மாதம் வரை சுவாமி தரிசனத்திற்காக ஏழாவது மலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறுவது வழக்கம், இந்த மலையின் பின்பகுதியில் கேரள வனப்பகுதி அமைந்துள்ளது.
கோவையின் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி அணையும் இந்த வெள்ளிங்கிரி மலையின் பின்பகுதியில் அமைந்துள்ளது. வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே மலையேற பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர். மற்ற நாட்களில் மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தத் தடையை பயன்படுத்தி ஏழாவது மலையின் பின்புறம் கேரளாவைச் சேர்ந்த சில கஞ்சா வியாபாரிகள், தும்பியார் முடி சோலை என்ற இடத்தில் கஞ்சா பயிரிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அடர் வனப்பகுதி என்பதாலும் மனித நடமாட்டம் இல்லாததாலும் அங்கு கஞ்சா எளிதாக பயிரிடப்பட்டுள்ளது என சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, வனத் துறையினர் இந்த கஞ்சா செடிகளை உடனடியாக அழிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈஷா யோக மையத்தின் அருகே பிடிபட்ட 15 அடி ராஜ நாகம்!