கோவை: கோவையின் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி, கிராம உதவியாளராக முத்துசாமி ஆகியோர் பணியாற்றினர். இந்நிலையில் இங்கு கடந்த 6ஆம் தேதி, கோபிராசிபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோபால்சாமி ஆவணங்களை சரிபார்க்க வந்துள்ளார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்விக்கும், கோபால்சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த கிராம உதவியாளர் முத்துசாமியை, சாதி பெயரை கூறி திட்டி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொன்னதாக, விவசாயி கோபால் சாமி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஒருதலைப்பட்ச அறிக்கை தாக்கல்
காலில் விழுவது போன்ற காணொலிக் காட்சிகளும், இணையத்தில் வெளியாகி வைரலானது. சமூகவலைதளங்களில் இந்த காணொலியைக் கண்ட பலரும், அரசு அலுவலர்களுக்கு ஆதரவாக, கோபால் சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமெண்ட்களை பதிவிட்டனர்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோர் காவல் துறையில் புகாரளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அலுவலர்கள், விவசாயி கோபால்சாமியிடம் விசாரணையில் ஈடுபடாமலேயே முத்துசாமிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கலைச்செல்வி, முத்துசாமி ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கிராம உதவியாளரின் நாடகம் அம்பலம்
இந்நிலையில் சமீபத்தில் விவசாயி கோபால்சாமியை, கிராம உதவியாளர் முத்துசாமி தாக்கும் காணொலி வெளியாகி வைரலானது. அந்த காணொலியில் கலைச்செல்வியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் விவசாயியை, முதலில் உதவியாளர் முத்துசாமி தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்.
பின்னர் ஒருகட்டத்தில் கோபமடைந்த முத்துசாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கி தரையில் அமர வைக்கிறார். இதனைக் கண்டு கூச்சலிடும் கலைச்செல்வி, மீண்டும் விவசாயியையே திட்டுகிறார். இவ்வாறாக அந்த காணொலி நிறைவு பெறுகிறது.
இதனையடுத்து காலில் விழுந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை அறிய, மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் இரு தரப்பிலும் விசாரணை நடத்தினார். விசாரணையில் விவசாயியை சிக்க வைப்பதற்காக, கிராம உதவியாளர் முத்துசாமி காலில் விழுந்து அழுது நாடகமாடியது அம்பலமானது.
இருவரும் பணியிடை நீக்கம்
இதற்கு கிராம நிர்வாக அலுவலர் உடந்தையாக இருந்து முதல்கட்ட விசாரணையில் தகவலை மறைத்துள்ளார். தற்போது இது தொடர்பான விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வழக்கம்போல், அரசு அலுவலர்களே இப்படித்தான் என நெட்டிசன்கள் மீண்டும் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி விவகாரம்: லஞ்ச ஒழிப்புத்துறையினரின் வளையத்தில் சிக்கும் முக்கியப்புள்ளிகள்