கோவை: காந்திபுரத்தில் உள்ள பாஜகவின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில், ஆடிட்டர் ரமேஷின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைக்கு விற்பனை
அப்போது அவர் பேசுகையில், "ஆடிட்டர் ரமேஷ் மறைவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகள், தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதற்கான ஆதாரங்களை பாஜகவினர் திரட்டிவருகின்றனர்.
சீர்மிகு நகரம் திட்டத்தின் கட்டுமான பணிகளுக்காக கோயில்கள் இடிக்கப்படுவதற்குப் பதிலாக, கோயில்களை அழகுப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
பத்திரிகையாளர்கள், முக்கியப் பிரமுகர்களின் அலைபேசி தரவுகள் 'பெகாசஸ் ஸ்பைவேர்' என்ற செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு, ஒன்றிய அரசு உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிடும்.
கட்சியின் கருத்தையே பிரதிபலிக்கிறேன்
கொங்குநாடு விவகாரத்தில் தனிப்பட்ட கருத்து எதுவும் இருக்க முடியாது. நான் கட்சியின் கருத்தையே பிரதிபலிக்கிறேன்.
தமிழ்நாட்டைப் பிரிக்க நினைக்கவில்லை. ஆனால், இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சினைகள், தேவைகள், கோரிக்கைகளை மாநில அரசு எப்படி நிறைவேற்றுகிறது என்பதைப் பொறுத்தே, கொங்குநாடு குறித்த பாஜகவின் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும்” என்றார்.
மேலும் அவரிடம் திமுக குறித்து விமர்சித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளம்பரம் தேடுவதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், பிரதமரை திமுகவினர் விமர்சிப்பது விளம்பரத்துக்காகவா என எதிர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: உயர் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பழகன் மீது பரபரப்பு புகார்!