கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பாஜக அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலேயே ஒரு மாவட்டத்தில் 4,234 பேருக்கு கரோனா பாதிப்பு என்பது அதிகம். கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை வேண்டும். கோயம்புத்தூருக்கு கூடுதலான தடுப்பூசிகளை அரசு ஒதுக்க வேண்டும். தினசரி 30 ஆயிரம் தடுப்பூசிகள் போடும் அளவிற்காவது மாநில அரசு தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும். மாநில அரசுக்கு குறைவான தடுப்பூசிகளை மத்திய அரசு அளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், மாநில அரசு கையிருப்பில் வைத்திருக்கும் தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு செல்லாமல் தொடர்ந்து தடுப்பூசிகளை மட்டும் கேட்கிறது. கையில் இருக்கும் தடுப்பூசிகளை இரண்டு நாட்களில் மக்களுக்கு செலுத்த வேண்டும். அதை விட்டு கூடுதலாக ஊசிகளை மட்டும் கேட்கிறார்கள்.
அனைவரும் சேர்ந்தே அரசியல் செய்யலாம்:
சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அரசியல் செய்ய வேண்டாம் என பத்திரிகைகளில் குறிப்பிட்டு வருகிறார். ஆனால், மக்களுக்காக பணி செய்யத்தான் நாம் அரசியலில் இருக்கிறோம். மக்கள் தேவையைப் பூர்த்தி செய்யுங்கள், அனைவரும் சேர்ந்தே அரசியல் செய்யலாம்.
பாஜக வேட்பாளர்களுக்கு பணமா?
சமூக வலைதளங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு தலா 13 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை ஒன்றுமில்லை. தேர்தல் நேரத்தில் செலவுகள் குறித்து ஆணையத்திடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், கேமராவுடன் அலுவலர்கள் பின் தொடர்ந்து கொண்டுதான் இருந்தனர்.
மத்திய அரசிடம் கோரிக்கை:
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடமிருந்து கூடுதலான ஆக்ஸிஜனை பெற்றுள்ளோம். அதேபோன்று தடுப்பூசிகளையும் கூடுதலாக கேட்டுள்ளோம். எங்கள் மாவட்ட மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். ஆகையால் கொஞ்சம் கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அதிமுக பெயர் சொல்லும் கல்வெட்டுக்கள்: தமிழ்நாடு அரசு மறைப்பதாக குற்றச்சாட்டு!