கோயம்புத்தூர்: தேவாங்கபேட்டை மேல்நிலைப் பள்ளி அருகில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "தமிழகத்திற்கு தனியாக, நீட் தேர்வு விலக்கு கொடுக்க முடியுமா? மீண்டும் ஒரு மாநிலத்துக்கு மட்டும் விக்கு அளிக்க முடியுமா? என்பது சட்டச்சிக்கல். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னது திமுக, அதற்கான ரகசியம் தெரியும் என்று சொன்னவர் இன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர்.
அவர்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகியும் கூட இன்னும் எந்த அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்? ஒருவேளை முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்னொரு அரசியல் மாற்றம் மத்தியில் ஏற்படும் என கூறினால், அவர் கனவு காண்கிறார் என்று அர்த்தம். ஒருபோதும் மத்தியில் அரசியல் மாற்றம் என்பது ஏற்படாது. மீண்டும் பாஜக தான் ஆட்சி அமைக்கப்போகிறது" என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் ஒவ்வொரு வகையான பின்னணி இருக்கிறது, எந்த ஒரு குழந்தையும் தற்கொலை செய்ய வேண்டும், பெற்றோர் உயிரிழக்க வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள். ஆனால், மாணவர் சமுதாயத்தை, நீட் தேர்வின் மூலம் இடம் கிடைக்காவிட்டால் நீங்கள் உயிரிழக்கலாம், அப்படி உயிரிழந்து விட்டால் நீங்கள் பெருமைப்படுத்தப்படுவீர்கள், உங்கள் குடும்பத்துக்கு உதவி கிடைக்கும் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது திமுக.
இதற்கு முன்னாள் பெரம்பலூரில் ஒரு மாணவி இறந்தவுடன் அதை மிகப்பெரிய அரசியலாக மாற்றி அதில் குளிர்காய்ந்தவர்கள் திமுக. ஆட்சி அதிகாரங்கள் இவர்களிடம் இருக்கும் போதும் இம்மாதிரியான தற்கொலைகள் ஏன் நடைபெறுகிறது? அதற்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும், "ஆளுநர் மீது பாய்வதை விட்டு விட்டு, தமிழகத்தில் எத்தனையோ காரணங்களால் இதுபோன்ற தற்கொலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது, எல்லா மனித உயிர்களையும் முதலமைச்சர் ஓரே மாதிரி பார்க்க வேண்டும். முதலமைச்சர் அனைவருக்கும் பொதுவானவர்" என கூறினார்.
அதனைத் தொடர்ந்து, "நாங்குநேரி சம்பவம் என்பது அதிர்ச்சிகரமானது. ஒன்றாகப் பழகி, விளையாடி சகோதரத்துவத்தை ஏற்படுத்த வேண்டிய வயதில் இந்த சம்பவம் அதிர்ச்சியாக இருக்கிறது. சமூக நீதி பேசுகின்ற மாநிலத்தில் இளம் வயதில் இருக்கும் மாணவர்கள் இம்மாதிரியாக ஏதோ ஒரு வகையில் தாக்கத்திற்கு ஆளாகின்றனர்.
சமூக நீதி பேசும் இடம், பெரியார் மண். இந்தியாவிற்கே சமூக நீதியைக் காட்டுகின்றோம் என்று பேசிக் கொண்டிருந்த இவர்களால், சமூக நீதியை மாணவர்களிடம் கூட கொண்டு சேர்க்க முடியவில்லை என்பது மோசமான விஷயமாகப் பார்க்கிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாங்குநேரி மாணவன் சின்னதுரைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை வெற்றி - சென்னை ஸ்டான்லி மருத்துவ குழுவினர் தகவல்!