கோயம்புத்தூர்: பாஜக சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ’நம்ம ஊர் பொங்கல்’ என்னும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர மாவட்டம் சார்பில் கோவை பூ மார்க்கெட் பகுதியிலுள்ள தெப்பக்குளம் மைதானத்தில் "நம்ம ஊர் பொங்கல்" விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மாணவ - மாணவிகளுக்கு கோலப் போட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ சிறப்பு விருந்திநராக கலந்து கொண்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசனிடம் தமிழ்நாடு - தமிழகம் என்பது குறித்த கேள்விக்கு, 'நாம் பேச்சு வழக்கில் தமிழ்நாடு எனக் கூறி வருகிறோம். தமிழகம் என ஆளுநர் சொல்வதில் இருக்கின்ற அர்த்தம் என்னவென்றால், தமிழ்நாடு என்கிற உருவகம் போய்விடக்கூடாது, தமிழகம் எனும் பொழுது ஒன்றுபடுத்துதல். இந்திய நாட்டினுடைய ஆன்மா என்பது பல்வேறு மொழிகள், பல்வேறு பழக்க வழக்கங்கள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்ற ஒருமைப்பாட்டு உணர்விற்காக அவர் கூறியது. அதனை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை' என்றார்.
மேலும் ஆளுநரின் உரை குறித்து திருமாவளவன் பேசியதற்கு பதில் அளித்த அவர், 'ஆளுநரை பிடிக்கவில்லை என்பதால் அவர் வைக்கும் கருத்துகளை விமர்சனங்களாக திருமாவளவன் பார்த்து வருகிறார். ஆளுநர் பிரிவினை வாதத்தை பேசவில்லை. தமிழ்நாடு தனியாக போகவேண்டும் எனப் பேசவில்லை. அவர் பேசும் அனைத்தும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டிருக்கும் கருத்துகள்' என்றார்.
தற்போது வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு பேச்சு என்றார் போல் செயல்பாடுகள் உள்ளதாகத் தெரிவித்தார். அதனை பால் விலை, மின்கட்டணம் உயர்வு என பலவற்றில் நிரூபித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள சாலைகளைப் பொறுத்தவரை வாகன ஓட்டிகள் உயிருடன் வீடு திரும்ப முடியுமா என்கின்ற நிலைமையில் தான் உள்ளதாகவும்; குப்பை பிரச்னைகளும் தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் வாக்குகளை பெற்றுக் கொண்டு சென்ற கவுன்சிலர்கள் யாரும் வெளியில் வருவதில்லை என எனவும்; கொள்ளை வாசல் வழியாக ஜெயித்து விட்டு மக்களின் பிரச்னைகளுக்கு முன் வருவதில்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநர் ரவி என்னுடன் விவாதம் செய்யத் தயாரா? - சீமான்