கோயம்புத்தூர்: பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் டெல்லி சென்று வந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், “33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு, பிரதமருக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே டெல்லி சென்றிருந்தேன்.
நான் பேச்சுவார்த்தையில் உடனிருந்ததாக தவறான செய்தியை சில மீடியாக்கள் வெளியிட்டிருந்ததாக தகவல்கள் வந்தது. நேற்று மாலை (செப்.22) முழுவதும் டெல்லியில் கட்சிப் பணிகளில்தான் இருந்தேன். நான் அங்கு வேறு எந்த விசயத்திலும் இல்லை. 'என் மண் என் மக்கள்' யாத்திரை என்னுடைய தொகுதிக்கு வரப்போகிறது. அதற்காகத்தான், நான் உடனடியாக அங்கிருந்து திரும்பிவிட்டேன்.
இதையும் படிங்க: கேரள லாட்டரியில் ரூ.25 கோடி பம்பர் பரிசை அள்ளியது திருப்பூர் கள்ள லாட்டரி கும்பலா..? நீடிக்கும் மர்மம்!
தொலைக்காட்சி செய்தியைப் பார்த்தும், பிறர் சொல்லியும்தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி வந்து சென்றதே தெரியும். ஒரு மகளிர் அணித் தலைவராக அடுத்த 5 மாநிலத் தேர்தல் பணிகளுக்கான கூட்டம் இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு என்னுடைய பணிகள் குறித்து, என்னுடைய நிர்வாகிகளுடன் தனியாக கூட்டம் வைத்திருந்தேன். 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, மகளிர் அணி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிட்டோம்” எனக் கூறினார்.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியது தெரியாது என்றும், தான் பேச்சுவார்த்தையின்போது உடன் இருந்ததாக சொல்வது முற்றிலும் தவறான கருத்து எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக மகளிர் அணி தலைவராக, பிரதமரின் பாராட்டு விழாவை முன்னின்று நடத்துவது தொடர்பாகவே டெல்லி சென்றதாகவும், கூட்டணி தொடர்பான விவகாரங்களில் தேசிய தலைமை மட்டுமே முடிவுகளை எடுக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: "உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை" - முதலமைச்சர் அறிவிப்பு!