கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை வட்டத்திற்குள்பட்டது கம்பாலபட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்ட கோடங்கிபட்டி குக்கிராம மக்கள் இலவச பட்டா வழங்கக் கோரி பல ஆண்டுகளாகக் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் கோடங்கிபட்டி கிராம மக்கள், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவை சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
கண்டிசன் பட்டா
அதில், "ஆனைமலை தாலுகாவிற்குள்பட்ட கம்பாலபட்டி ஊராட்சியில் ஒன்பது குக்கிராமங்கள் உள்ளன. அங்கு ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் நிபந்தனையை மீறி மாற்று இனத்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்காணும் கண்டிசன் பட்டாவை ரத்துசெய்து, வீட்டுமனை இல்லாத சுமார் 100 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்சார வசதி
வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சாமியார் கோயில் அருகே வசிக்கும் சுமார் 20 குடும்பத்தினருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. அவர்களுக்கு விரைவில் பட்டா வழங்க வேண்டும்.
அப்பகுதியில் மின்சார வசதியின்றி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடனடியாக மின்சார வசதி செய்துகொடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: வண்டலூர் பூங்காவில் அரியவகை அணில் குரங்குகள் திருட்டு