இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இரு காதல் ஜோடிகளுக்கு இன்று சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவர்கள் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழி ஏற்ற பின் இரு காதல் ஜோடிகளும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், 'சாதிய கட்டுமானங்கள் தகர்ந்துபோக சாதிமறுப்பு காதல் திருமணங்கள் அவசியம். சாதி - மத ஏற்றத்தாழ்வுகளைக் களைய சமூக மாற்றத்தை கொண்டுவர காதல் திருமணங்கள் வரவேற்ககப்பட வேண்டும். சாதியவாதிகளும் மதவாதிகளும் தங்களது எதிரியாக கருதும் காதலே அவை இரண்டையும் ஒழிக்கும் ஆயுதங்களாக நாங்கள் கருதுகின்றோம்.
கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கோவை பெரியார் படிப்பகத்தில் 4500 காதல் திருமணங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் சிறப்பாக வாழ்க்கையை நடத்துகின்றனர். இன்று மட்டும் 4 காதல் திருமணங்கள் செய்து வைக்கப்பட உள்ளன. காலையில் இரு திருமணங்கள் முடிந்த நிலையில் மாலையில் இரு திருமணங்கள் நடத்தப்பட இருக்கின்றது' என்றார்.
காதலர் தினத்தை முன்னிட்டு பெரியார் படிப்பக வாசலில் கேக்வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களும், ஏற்கனவே காதல் திருமணம் செய்து கொண்டவர்களும் கேக் வெட்டி உற்சாகமாக காதலர் தினத்தை கொண்டாடினர்.
இன்று காதலர் தினம் என்பதால் இன்றைய தினத்தை தேர்வு செய்து திருமணம் செய்திருப்பதாக தெரிவித்த இந்த இரண்டு ஜோடிகளும் காதல் திருமணம் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கூறினர்.
இதையும் படிங்க : கோவை தொடர் குண்டுவெடிப்பு தினம் - பாதுகாப்புப் பணியில் காவலர்கள்