நானம்மாள் கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ஆம் ஆண்டு பிறந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய தாத்தா மன்னார்சாமியிடம் இருந்து நானம்மாள் யோகாசன பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். தனது 10 வயதில் யோகா கற்க ஆரம்பித்தவர், அதை 98 வயது கடந்த போதிலும் விடவில்லை. சர்வாங்காசனம், மச்சாசனம், யோகமுத்ரா, வஜ்ராசனம், ஹாலாசனம், தூலாசனம், பச்சிமோதானாசனம் போன்ற 50 கடினமான ஆசனங்களையும் அசாதாரணமாக செய்து அசத்தக் கூடியவர் நம் யோகா பாட்டி.
இதுவரை நானம்மாள் தான் கற்ற கலையைப் பல லட்சம் பேருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். இவரிடம் யோகா பயின்ற சுமார் 600க்கும் மேற்பட்டோர்கள் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி ஆசிரியர்களாக பணிபுரிந்துவருகின்றனர். இதில் 36 பேர் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களே என்பது சுவாரஸ்யத் தகவல்.
யோகா பயில ஆரம்பித்ததிலிருந்து தன் இறுதிமூச்சு வரை நாள் தவறாமல் யோகாசனம் செய்துவரும் நானம்மாள், ஒருநாள் கூட உடல்நிலை சரி இல்லையென்று முடங்கியது கிடையாது. அவர் மருத்துவமனை பக்கமே சென்றதில்லை. 98 வயதில் கீழே விழுந்து முதுகில் அடிபட்ட நிலையிலும் விடாமல் யோகா செய்தார்.
கோவையில் 50 வயதுக்குட்பட்டோருக்கான யோகாசனப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மாநில அளவிலான பல போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை குவித்திருக்கிறார். வீடுமுழுக்க விருதுகளை வாங்கிக் குவித்து வைத்திருக்கும் நானம்மாள், குடியரசுத் தலைவரிடம் பெண் சக்தி விருதை பெற்றுயுள்ளார். இவருடைய சிறப்புகளை உணர்ந்த மத்திய அரசு 2018 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. அப்போது அவருக்கு வயது 98 ஆகும்.
குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் யோகா பயிற்சியளிக்கும் நானம்மாளின் முக்கிய பங்கு, துரித உணவுகளைத் தவிர்ப்பது குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது. இவரது கணவர் சித்த வைத்தியர் என்பதால், அவர் நானம்மாளின் பயிற்சிக்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். ஒட்டுமொத்தமாக 11 கொள்ளுப்பேரன் - பேத்திகள் உள்ளன. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு மேலாக யோகா பயிற்சியைச் செய்துவரும் நானம்மாள் வயது முதுமை காரணமாக இன்று மதியம் உயிரிழந்தார்.