கோயம்புத்தூரில் என்.டி.சி. பஞ்சாலைகளின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இது தவிர மகாராஷ்டிரா மாநிலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காணொலி மூலம் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், என்.டி.சி. ஆலைகள் செயல்படும் மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கி அதற்கு சேவ் என்.டி.சி. எனப் பெயரிடப்பட்டது.
இதன் ஒருங்கிணைப்பாளராக சி. பத்மநாபன், தலைவராக சச்சின் அகிர், உதவி தலைவராக கே.என். கோபிநாத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பி.ஆர். நடராஜன், எம். சண்முகம், இளமறம் கரீம், மராட்டியம், குஜராத், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து ஒருங்கிணைப்புக் குழுவைச் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன் முதல்கட்டமாக ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்ற வாயிலில் போராட்டத்தில் ஈடுபடுவது, பிரதமர், துறை சார்ந்த அமைச்சர்களைச் சந்தித்து என்.டி.சி. ஆலைகளை இயக்கத் தேவையான அழுத்தத்தை ஏற்படுத்துவது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதன்பின் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சி. பத்மநாபன் கூறுகையில், ஒன்றிய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்திற்குச் சொந்தமாக நாடு முழுவதும் 23 பஞ்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் ஏழு பஞ்சாலைகள் இயங்கிவருகின்றன. இதில் கோவையில் மட்டும் ஐந்து பஞ்சாலைகள் செயல்படுகின்றன. இந்த நிலையில் கரோனா தொற்று முதல் அலையில் மார்ச் மாதம் என்.டி.சி. பஞ்சாலைகள் மூடப்பட்டன.
இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னும் என்.டி.சி. பஞ்சாலைகள் திறக்கப்படவில்லை. என்.டி.சி. நிர்வாகம் அலுவலர்களுக்கு முழுச் சம்பளத்தைக் கொடுத்துவிட்டு தொழிலாளர்களுக்குப் பாதி சம்பளம் மட்டுமே தரப்படுகிறது.
பஞ்சாலைகள் அனைத்தையும் முழுமையாக இயக்கி வேலை வழங்க வேண்டும். முழு ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
ஆனால் ஒன்றிய அரசு இதர பொதுத் துறை நிறுவனங்களைச் சிறிது சிறிதாக விற்பதைப்போல கரோனா தொற்றால் மூடப்பட்ட நிலையில் என்.டி.சி. ஆலைகளையும் அதன் சொத்துகளையும் விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருவதாகத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இதற்கேற்றாற்போல் தொடர்ந்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு அலட்சியப்படுத்திவருவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பஞ்சாலைத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு!