கோவை: கோவை மாவட்டம் முழுவதும் இன்று (அக். 1) அதிகாலை முதலே கனமழை பெய்தது. இதனால் நகர்ப் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த இளங்கோ - பொற்செல்வி தம்பதியினர், பணி நிமித்தமாக தங்களது காரில் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கோவையை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
சாலையின் வடிவமைப்பே விபத்துக்கு காரணம்
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த தம்பதியர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகிலிருந்த சக வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கனமழை காரணமாகவே விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.
விபத்து குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் பேசுகையில், “சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கருமத்தம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்ட சாலையின் வடிவமைப்பு சரியில்லாததே விபத்திற்கு காரணம். இங்கு சிறு மழை வந்தாலும் தொடர் விபத்து ஏற்படுகிறது. பெரும் உயிரிழப்பு நிகழ்வதற்கு முன்னர் சாலையை செப்பனிட வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க: ஆனைமலை குழந்தை கடத்தல் வழக்கு: 3 பேர் கைது