கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த குள்ளக்காபாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நான்கு சக்கர வாகனத்திற்குத் தேவையான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தக் கம்பெனியில் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், குரும்ப பாளையத்தைச் சேர்ந்த உத்தரராஜ் இருவரும் பணியாற்றி வருகின்றனர்.
இருவரும் வேலைமுடித்து வீட்டிற்கு வந்ததும் வயிற்று வலி தாங்க முடியாமல் தவித்துள்ளனர். உடனே, இருவரும் பொள்ளாச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கும் பார்க்க முடியாத காரணத்தினால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையே செல்லும் வழியில், வலி தாங்க முடியாமல் இருவரின் உயிரும் பிரிந்தது.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை செய்ததில் மதுக்கடை மூடப்பட்டிருப்பதால், போதைக்கு ஆசைப்பட்டு இருவரும் உதிரி பாகங்களுக்கு வண்ணம் தீட்டப் பயன்படுத்தும், தின்னர் எனும் திரவத்தைக் குடித்து இறந்ததாகத் தெரிய வந்துள்ளது.
மேலும் இருவரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பொள்ளாச்சி வட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆணையரை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி பாதிக்கப்பட்ட பெண் வியாபாரி கோரிக்கை!