கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்டப் பல்வேறு வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விமான சேவை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான விமானப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விமான நிலைய வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு நேற்று (ஜூலை 21) மாலை விஸ்தாரா நிறுவன விமானத்தில் பயணம் செய்வதற்காக பயணிகள் காத்துக்கொண்டு இருந்தனர். அப்போது பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை முதற்கட்டமாக பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த நேரத்தில் ஒருவரது கைப்பையில் இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது தெரிய வந்து உள்ளது.
இதனையடுத்து அந்த பையைக் கொண்டு வந்த நபரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த விசாரணையில், இது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என அந்த நபர் கூறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் உடன் சிக்கிய நபர் ராஜஸ்தானைச் சேர்ந்த சியாம் சிங் என்பது தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், அவர் கடந்த மாதம் திருப்பூரில் உள்ள தனது சகோதரர் பவானி சிங் என்பவரது வீட்டிற்கு வந்து தங்கி இருந்ததும், அதன் பின்னர் நேற்று பிற்பகல் தனது சொந்த ஊருக்குச் செல்ல இருந்ததும் தெரிய வந்து உள்ளது.
மேலும், முதலில் மும்பை சென்று அங்கு இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குச் செல்ல ஷியாம் சிங் திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விஸ்தாரா விமான நிறுவன பாதுகாப்பு பரிசோதகர் அருண் குமார் அளித்தப் புகாரின் பேரில், பீளமேடு காவல் துறையினர் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர்.
மேலும், இந்த துப்பாக்கி குண்டுகள் எங்கு இருந்து கொண்டு வரப்பட்டது என்றும், இதற்கு உரிமம் உள்ளதா என்றும், அல்லது வேறு ஏதாவது சதித் திட்டத்தில் ஈடுபட முயன்றாரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் 8 பயணிகளிடம் இருந்து 1.3 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Trichy Airport: திருச்சி விமான நிலையத்தில் 1.3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!