கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற நகைப் பறிப்பு, திருட்டு சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டி பொள்ளாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கேஜி சிவகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் நகைப் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைத் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று பொள்ளாச்சி - பல்லடம் சாலை, காட்டம்பட்டி செஞ்சேரி பிரிவில் நடந்த வாகன சோதனையில், பொள்ளாச்சியை நோக்கி கேடிஎம் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரிக்கும்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
காவலர்களின் தீவிர விசாரணையில், அவர்கள் வியாசர்பாடியைச் சேர்ந்த கிஷோர், தஞ்சாவூரைச் சேர்ந்த சிவபிரகாஷம் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் கடந்த மாதம் நெகமம் காவல்நிலைய பகுதியில் நடைபெற்ற நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. ஆகையால் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 78 பவுன் நகைகளையும், Duke, pulsar பைக்குகள் மற்றும் ஒரு காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்களை விசாரித்ததில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நகைப் பறிப்பு மற்றும் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறு, குறு தொழில்களுக்கு புதிய சலுகைகள் - முதலமைச்சர்