ஆந்திராவிலிருந்து கேரளாவிற்குத் தமிழ்நாடு வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக கேரள மாநிலம் பாலக்காடு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வாளையாறு சோதனைச்சாவடி வழியாக வந்த மினி லாரி ஒன்றைத் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் வாகனத்தை ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றதை அடுத்து காவல் துறையினர் அதனைத் துரத்திச்சென்று மஞ்சாகுளம் அருகே மடக்கிப்பிடித்தனர்.
தொடர்ந்து வாகனத்தைச் சோதனை செய்தபோது தண்ணீர் கேன்களுக்கு கீழே மூட்டை மூட்டையாக கஞ்சா பொட்டலங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தில் இருந்து இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் பத்துவரிபாளம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு ரெட்டி (35), சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் வினோத் குமார் (27) என்பதும், ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவந்ததும் தெரியவந்தது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் மூன்று கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதுசெய்யப்பட்ட வெங்கடேஸ்வரலு ஆந்திராவில் பிரபல கஞ்சா வியாபாரியாக வலம்வந்ததும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.