பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த வாரம் இரண்டு புலிகள் வெவ்வேறு இடங்களில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. புலிகளின் உடல்களைக் கைப்பற்றிய அவர்கள் மருத்துவக் குழுவினரின் உதவியுடன் உடற்கூறாய்வு மேற்கொண்டனர். ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை.
இதனிடையே வனப்பகுதியையொட்டிய விவசாய நிலங்களுக்குள் புலிகள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவதால், உரிமையாளர்கள் பன்றி இறைச்சியில் விஷம் வைத்து அவற்றைக் கொன்றிருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகித்தனர். அதன் அடிப்படையில் ஆறு பேர் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணையையும் முடுக்கி விட்டிருந்தனர்.
இச்சூழலில் புலிகளைக் கொலை செய்ததாகக் கூறி சேத்துமடை பகுதியைச் சேர்ந்த ராசு, கருப்பசாமி ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில் புலிகளை விஷம் வைத்துக் கொன்றதாக அவர்கள் ஒத்துக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய வெள்ளியங்கிரி, முருகன் ஆகிய இருவரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இணையைத் தேடி ஈராயிரம் கி.மீ அலையும் புலியின் கதை