கோயம்புத்தூர்: திருமலையாம் பாளையம் பகுதி நஞ்சப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி சங்கவி (20). சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்று எண்ணிய இவர் தொடர் முயற்சியால் தற்போது மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது இல்லத்திற்கே சென்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாணவி படிக்க மடிக்கணினி வழங்கினார். மேலும் படிப்பதற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் கூறினார்.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் சங்கவி கூறியதாவது, "12 ஆம் வகுப்பு படித்த பிறகு பயம் இருந்தது. நீட் தேர்வு குறித்த புரிதல் இல்லை. 2018ஆம் ஆண்டு தேர்வு எழுதினேன். 6 மதிப்பெண் குறைவால் தவறவிட்டேன்.
தொடர்ந்து 2ஆவது முறையாக தேர்வு எழுதுவதற்கு கடினமாக படிக்க முயற்சி செய்தேன். ஆனால், கரோனா இரண்டாவது அலை, ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தால் ஆன்லைன் வகுப்பில் தொடர முடியவில்லை.
அம்மாவிற்கு கண் அறுவை சிகிச்சை செய்திருந்த சூழல், கையில் இருக்கும் புத்தகங்களை வைத்து நீட் தேர்விற்குப் படித்தேன். இதன் காரணமாக இம்முறை 202 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது வெற்றியை பார்த்து எங்கள் ஊர் குழந்தைகள் படிக்க தொடங்கியுள்ளனர். இதுவே நான் படித்ததற்கான வெற்றியாக பார்க்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை