கோவை: நடைபெறவிருக்கும் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெறுவதை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
அதன்படி, கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி குதிரை வண்டியில் வாக்குப்பதிவு குறித்த வாசகங்கள் அடங்கிய பேனர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மத்திய போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குதிரை வண்டியில், 'தேர்தல் விரல் மை தேசத்தின் வலிமை' என்று பேனர் ஒட்டியபடி குதிரை வண்டியை ஓட்டிச் சென்றனர்.
மேலும் அவர்களின் விழிப்புணர்வுப் பரப்புரை அழைப்பிதழ், திருமண பத்திரிக்கைபோல் வடிவமைத்து மக்களுக்கு அளித்திருந்தனர். தேர்தல் விழிப்புணர்விற்காகப் போக்குவரத்து அலுவலர்கள் எடுத்த இந்த முயற்சி அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.