கோவை மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பகமாக உள்ளது. இந்த ஆண்டு கோடை மழை பொய்த்த நிலையில், பெரும்பாலான வனப்பகுதிகள் காய்ந்துவருகின்றன. மேலும் சாலைகளின் ஓரங்களில் மரங்களின் காய்ந்த இலைகள் நிறைந்து கிடக்கின்றன. இதனால் சாலைகளில் செல்வோர் மூலம் பிடிக்கப்படும் பீடி, சிகரெட்டால் தீ பிடித்து வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயம் உள்ளது.
இதனைத் தடுக்கும் விதமாக சாலைகளில் உள்ள காய்ந்த இலைகளை அகற்றுவதுடன், வனப்பகுதிக்கும் சாலைகளுக்கும் இடையே தீ தடுப்புக் கோடு அமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு வால்பாறை அட்டகட்டி பயிற்சி மையத்தில் வனத்துறையினருக்குத் தீ ஏற்படாமல் தடுக்கும் வழி, தீ ஏற்பட்ட பின் தடுக்கும் முறை, தீயைக் கட்டுபடுத்தி அணைப்பது உள்ளிட்ட பயிற்சிகள் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர், மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில் மாவட்ட வன அலுவலரின் நேர்முக உதவியாளர் முரளீதரன், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், பயிற்சி மைய அலுவலர் நவீன், வால்பாறை மானாம்பள்ளி, டாப்சிலிப், உலாந்தி, பொள்ளாச்சி வனச்சரகங்களைச் சேர்ந்த வனத் துறையினர் கலந்துகொண்டனர்.