முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக கைதுசெய்யப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின்போது பேசிய இராமகிருட்டிணன், "தமிழ்நாடு அரசு ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்று கூறியும், தமிழ்நாடு ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதை கண்டிக்கிறோம். நீதிபதி, சிபிஐ அதிகாரிகள் சிலர் கூட பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியும் 29 ஆண்டுகளாக சிறையில் வைத்து கொடுமை செய்துவருகின்றனர்.
இந்தியாவில் ஆயுள் தண்டனையின் ஆயுட்காலம் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் இருக்கக்கூடிய நிலையில், இவர்கள் மட்டும் 29 ஆண்டு காலமாக சிறையில் அடைத்து கொடுமை செய்யப்பட்டு வருகின்றனர்.
அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் வருகின்ற 30ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையை முற்றுகை இடுவோம்" என்று எச்சரிக்கை விடுத்தார்.