கோயம்புத்தூர்: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வரைப்படத்திலேயே இடம் பெறாத கோவை மாவட்டம், தற்போது இந்தியாவில் உள்ள தலை சிறந்த நகரங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது. தென் இந்தியாவின் மான்செஸ்ட்டர் என்று அறியப்பட்ட கோவை, கல்வி நகரமாகவும், மருத்துவ நகரமாகவும், தொழில்நகராகவும் திகழ்ந்து வருகிறது.
பல்வேறு தொழில் வளங்களுடன், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது கோவை. உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் என புகழப்படும் சிறுவாணி அணை, கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இங்கு நிலவும் குளுமையான, இதமான சீதோஷ்ன நிலை கோவைக்கு வந்தோரை குளிர வைக்கிறது.
முன்பு கோவன் என்ற பழங்குடியின தலைவன் ஆண்ட பகுதி கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டது. பின்னர் அது மருவி கோயம்புத்தூர் ஆகியுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்களுடன் வணிகம் நடைபெற்றுள்ளது. அதற்கான சான்றுகள் நொய்யல் நதிக்கரையோரங்களிலும், பாலக்காட்டு கணவாய் வழியாக மேற்கு, கிழக்கு கடற்கரைகளை இணைக்கும் ராஜா கேசரி பெரு வழியிலும் கண்டறியப்பட்டுள்ளன.
கோயம்புத்தூரை சேரர், சோழர், பாண்டியர், விஜய நகர மன்னர்கள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், பிரிட்டிஷ் என பலர் ஆண்டுள்ளனர். கோட்டை மேடு பகுதியில் இருந்த கோட்டைக்காக திப்பு சுல்தானும், ஆங்கிலேயர்களும் போர் புரிந்ததாக வரலாறு கூறுகிறது. திப்பு சுல்தான் வீழ்ச்சிக்கு பின்னர் 1799இல் கோவை ஆங்கிலேயர் வசமானது.
ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக 1804ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதியன்று கோவை நகரை தலைநகரமாக கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தை உருவாக்கினர். இதனைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டில் கடும் பஞ்சத்திலும், 20ஆம் நூற்றாண்டில் காலரா, பிளேக் ஆகிய தொற்று நோய்களிலும் சிக்கி பல்லாயிரம் மக்களை இழந்தது.
அதன் பின்னர் நகரப்பகுதி விரிவாக்கம், சுகாதாரமான குடிநீர் ஆகியவை அந்நிலையை மாற்றியது. 1866ஆம் ஆண்டில் கோவை நகராட்சியாக தரம் உயர்ந்தது. பஞ்சாலை உற்பத்தியையும், நகரின் தொழில் வளர்ச்சியையும் துவக்கி வைத்தது. பைகாரா மின்சாரம் கோவைக்கு வந்த பின்னர், பஞ்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து கோவை மக்களின் வாழ்வாதரமாக பஞ்சாலைகள் விளங்கின.
பின்னர் பம்ப், மோட்டார் தொழில்களும், இயந்திர பாகங்களை உற்பத்தி செய்யும் பவுண்டரிகளும் என அதனை சார்ந்து பல்வேறு தொழில்கள் உருவாகின. வெட் கிரைண்டர் கோவையில் தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. இப்படி புதிய புதிய தொழில்கள் இணைந்து கோவையை தொழில் நகரமாக உருவெடுக்கச் செய்தன. பல லட்சக்கணக்கான மக்களுக்கு கோவை வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.
அதுமட்டும் இல்லாமல் கோவையில் உருவான செண்ட்ரல் ஸ்டுடியோ, பட்சி ராஜா ஸ்டுடியோ ஆகியவற்றில் பல திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன. உயிர் சூழல் மண்டலமாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் அணைகள் உள்ளன.
வால்பாறை தேயிலை உற்பத்திலும், பொள்ளாச்சி தென்னை உற்பத்தியிலும், சூலூர், கருமத்தம்பட்டி பகுதிகள் விசைத்தறி தொழிலிலும், புறநகர் பகுதிகள் விவசாயத்திலும், கல்வியிலும் என அனைத்திலும் சிறந்து விளங்கி வருகின்ற கோவை மாவட்டமாக உருவாக்கப்பட்டு இன்று 219வது ஆண்டு தினத்தை கொண்டாடுகிறது.