சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டதுமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதன்படி அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருள்கள் வழங்குவது தண்டனைக்குரியது.
இந்நிலையில் வால்பாறையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் பொதுமக்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், பரிசுப்பொருள்களை முழுவதுமாக விநியோகிப்பதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, பரிசுப்பொருள்களை ரொட்டிக் கடை பகுதியில் உள்ள வீடு, பாறை மேடு தனியார் விடுதியில் உள்ள அறைகளில் வைத்திருந்தனர்.
இது குறித்து தகவலறிந்த திமுகவினர் பரிசுப் பொருள்கள் குறித்து தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி காவல் துறையினரிடம் புகாரளித்தனர். இதையடுத்து விசாரணை செய்த காவல் துறையினர், வருவாய்த் துறையினர் அறைகளில் பரிசுப்பொருள் இருப்பதை உறுதி செய்து, பொதுமக்கள் முன்னிலையில் அறைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் அறைக்கு காவல் துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : புதுச்சேரியில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குச் சத்துணவுத் தொகுப்பு வழங்கும் திட்டம்!