தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு நடைபெற்றது. கோவையில் 24 தேர்வு மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 11 ஆயிரத்து 887 பேர் எழுதினர்.
இதனை கண்காணிக்க 9 நடமாடும் அலுவலர்கள் 40 தேர்வுக்கூட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் மேபார்வையில் 5 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப்-1 தேர்வை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் பாலச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி செயலாளர் பாலச்சந்திரன்," மாநில அரசின் அனுமதியின்படி இன்று குரூப்-1 தேர்வானது நடைபெற்றது. தேர்வர்களுக்கு உடல் வெப்ப நிலையில் ஏதேனும் மாறுபாடுகள் காணப்பட்டால் அவர்களுக்கு என ஒவ்வொரு தேர்வு மையத்திலும் இரண்டு அறைகள் தனியாக ஒதுக்கப்பட்டிருந்தன. அங்கு அவர்கள் தேர்வு எழுதி கொள்ளும்படி கூறப்பட்டிருந்தது. இந்த தேர்வில் முறைகேடுகள் நடக்காதவாறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
200 கேள்விகளுக்கும் 200 பதிவுகளை அளிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் நடைபெறுகின்ற தேர்வுகள் குறித்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதிய விதிமுறைகளுடன் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு !