கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி. இவர் சூலூர் அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியில் பெட்ரோல் சேமிப்பு நிலையம் தொடங்க முடிவுசெய்தார். ஆனால் அந்த இடத்தில் மின்கம்பம் ஒன்று இடையூறாக இருந்துள்ளது. அதை இடமாற்றம் செய்ய அவர் பீடம்பள்ளியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அப்போது, அங்கு உதவிப் பொறியாளராகப் பணிபுரியும் வாசு என்பவர் பாலதண்டபாணியிடம் மின்கம்பத்தை மாற்ற ரூ.10 ஆயிரம் ரூபாய் கையூட்டுக் கேட்டுள்ளார். பணம் கொடுக்க விருப்பமில்லாத அவர் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவப்பட்ட ரூ.10 ஆயிரம் ரூபாய் பணத்தை பாலதண்டபாணி, உதவிப் பொறியாளர் வாசுவிடம் அவரது அலுவலகம் அருகே வைத்துக் கொடுத்தபோது அவர் பணத்தை வாங்கியுள்ளார்.
அதனை அங்கு மறைந்திருந்து கண்காணித்த ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர், லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளர் வாசுவை கைதுசெய்தனர். இதைத் தொடர்ந்து, வாசுவின் அலுவலகத்திலும் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு