ஆபத்தான நிலையில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்தி, சிலர் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வது வாடிக்கையாகி வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தான 'ரெம்டெசிவிர்' தேவையுள்ளோருக்கு கிடைக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இன்று(மே.8) கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கும், இம்மருந்து விற்பனைக்கு வந்துள்ளது.
இக்கல்லூரியில் உள்ள நூலக கட்டடத்தில் மருந்து விற்பனை நடைபெறுகிறது. இங்கு ஒரு மருந்து குப்பி 1,568 ரூபாய், 3 மருந்து குப்பிகள் 4,704 ரூபாய், 6 மருந்து குப்பிகள் 9,408 ரூபாய் முறையே விற்பனை செய்யப்படுகிறது.
மருந்து வாங்குவோர் கவனத்திற்கு..!
- ஆர்.டி-பி.சி.ஆர், சிடி ஸ்கேன், மருத்துவரின் பரிந்துரை நகல், நோயாளிகளின் ஆதார் அட்டை, மருந்து வாங்க வருபவரின் ஆதார் அட்டை ஆகியவை அவசியம்
- முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
முதல் முறையாக, 500 ரெம்டெசிவிர் மருந்துகள் வந்தடைந்துள்ளன. தொடர்ந்து மருந்துகள் வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காலத்திலும் மருந்துகள் விற்பனையாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:திருநங்கைகளுக்கும் இலவச பயணம்...ட்வீட்டுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின்