கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. புதிதாகக் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிந்து காணொலி மூலம் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாவட்ட ஆட்சித்தலைவர் கு. ராசாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, "தமிழ்நாடு அரசால் உள்ளாட்சித் துறைக்கு மட்டும் இதுவரை 107 விருதுகள் கிடைத்துள்ளன. கோவையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அலுவலகம் காத்திருப்பிடம், கழிப்பறை என அனைத்து வசதிகளுடனும் உள்ளன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபாதை வசதியும் அவர்களுக்கான காத்திருப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளன. கோவையில் இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்திவருகிறார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘விண்வெளி’ பாலத்தில் சிக்கிய பேருந்து.!