மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பாக இந்தியா முழுவதும் 18 இடங்களில் தொழில்துறையில் தீர்வுக்கான ஹார்டுவேர் கண்டுபிடிப்புகள் எனப்படும் ஸ்மார்ட் இந்தியா இயக்கத்தின் போட்டி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதனை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆணையத் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே பார்வையிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாணவர்களின் ஹார்டுவேர் கண்டுபிடிப்பு தொழில் துறையில் உள்ள குறைபாடுகளை தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் நாட்டிற்கு பயனுள்ள கண்டுபிடிப்புகளை இதுபோன்ற போட்டிகள் மூலம் மாணவர்கள் கொடுத்து வருவதாக தெரிவித்த அவர், மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு அரசு சார்பாக நிதியுதவி வழங்குவதோடு அதனைச் சந்தைப் படுத்துவதற்கான வாய்ப்புகளும் உருவாகிக் கொடுக்கப்படுகிறது என கூறினார்.
மேலும், பொறியியல் படிப்பிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட் தேர்வு இல்லை எனவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நீட் தேர்வு கொண்டு வர திட்டமிடப்பட்டது, ஆனால் அதற்கான பணிகள் ஏதும் நிறைவடையவில்லை, விரைவில் நீட் தேர்வு கொண்டுவரப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய சகஸ்ரபுத்தே, "தரமில்லாத பொறியியல் கல்லூரிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் சேர்க்கைக்கூட இல்லாத காரணத்தால் நிர்வாகமே கல்லூரியை மூடிவிட்டது. கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும் பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் ஒழுங்குமுறை குழு செயல்பட்டு வருவது" என்றார்.