தமிழ்நாட்டில் நேற்று(ஏப்.07) நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதியும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் நேற்று (ஏப்.6) வாக்குச்சாவடிகளைப் பார்வையிடுவதற்காக திமுக வேட்பாளர் செல்வபுரம் சென்றபோது அவரது காரை வழிமறித்து சிலர் அவரைத் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இதனால் வாக்குசாவடி அருகே இரு தரப்பினரிடையேயும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து திமுக வேட்பாளர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்தார். அதில், “என்னைத் தாக்க முற்பட்டவர்கள் அதிமுக, பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இச்சம்பவத்தால் வாக்குச்சாவடி அருகே, பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
அதனால் இரு கட்சிகளைச் சேர்ந்த 200 நபர்கள் மீதும் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியது, தேர்தல் விதிமுறைகளை மீறியது என்று செல்வபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு!