கடந்தாண்டு பிப்ரவரி 26ஆம் தேதி, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்கள் பலரை பாலியல் வன்புணர்வு செய்து சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட விவகாரத்தில் மணிகண்டன், திருநாவுக்கரசர், சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரும் பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டனர். பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், கடந்தாண்டு ஜூன் 22ஆம் தேதி பாதுகாப்பு கருதி, குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரையும் கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
சேலம் சிறையில் இருந்து இதுவரை மூன்று முறை கோவை நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு ஐந்து பேரும் அழைத்து வரப்பட்டனர். பாலியல் வன்புணர்வு வழக்கு கோவை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர், கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இவ்வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
மகிளா நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்ட பின்னர், முதல்கட்டமாக கடந்த மாதம் 25ஆம் தேதி, சேலம் மத்திய சிறையில் இருந்து காணொளி மூலம் கைதான ஐந்து பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மார்ச் 10ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இன்று 2ஆம் கட்ட விசாரணை மகிளா நீதிமன்ற நீதிபதி ராதிகா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம் மத்திய சிறையில் இருந்து பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டன், திருநாவுக்கரசர், சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய 5 பேரும் நேரில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, ஐவரின் நீதிமன்ற காவலை மார்ச் 24ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். இதையடுத்து சேலம் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் ஐந்து பேரையும் காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞர்கள் கைது