கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து கோவை மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், ஆசிரியர் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் , ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய கல்விக் கொள்கையில் இருந்த புதிய அம்சங்களை வரவேற்கும் விதமாக அமைந்து இருப்பதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த கருத்து கேட்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள் புதிய கல்வி கொள்கையில் மாற்று கருத்துடையவர்கள் யாரையும் அழைக்காமல், கல்வித் துறை சார்ந்த நபர்களை மட்டும் அழைத்ததாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், குற்றம்சாட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்தக் கூட்டத்தை கருத்து கேட்பு கூட்டம் என ஏற்றுக்கொள்ள கூடாது என வலியுறுத்திய அவர், அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ளும் வகையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் எனவும், கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். தொடர் எதிர்ப்பினால் கூட்டம் பாதியேலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.