கோவை மாவட்டம், சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் மற்றும் வேணுகோபால். நண்பர்களான இவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் கொலைச் செய்யப்பட்டு கிடந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடராபாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்களிடம் இருந்த நகை மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமராவை பறிமுதல் செய்த போலீசார் அதில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில், இருவரையும் மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலைச் செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது. காட்சியில் இடமபெற்றிருந்த உருவங்களை வைத்து விசாரித்ததில், திருச்சியை சேர்ந்த கருப்புசாமி, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து திருச்சி விரைந்து சென்ற போலீசார் அங்கு தலைமறைவாக இருந்த கருப்புசாமியை கைது செய்து கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் இதுதொடர்பான வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முன்விரோதம் காரணமாக கருப்புசாமி தனது நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திகேயன் மற்றும் வேணுகோபாலை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மூன்று ஆயுள் தண்டனையும், ரூபாய் நான்காயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குணசேகரன் தீர்ப்பளித்தார்.
மேலும் இந்த வழக்கில் கருப்பசாமியுடன் கைதான வெற்றிசெல்வன், செல்வன் ஆகியோர் மீதான குற்றாச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் இருவரும் விடுதலைச் செய்யப்பட்டனர்.